ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் இருந்த மாணவருக்கு ஜாமீன்- ஐகோர்ட்டு உத்தரவு
சரத்பவாருக்கு எதிராக டுவிட்டர் பதிவு விவகாரத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் இருந்த மாணவருக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
சரத்பவாருக்கு எதிராக டுவிட்டர் பதிவு விவகாரத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் இருந்த மாணவருக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சிறையில் அடைப்பு
நாசிக்கை சேர்ந்த பார்மசி கல்லூரி மாணவர் நிகில் பாம்ரே (வயது21). தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு எதிராக டுவிட்டரில் கருத்து கூறி இருந்தார். இது குறித்து நாசிக் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் அவரை கைது செய்தனர். மேலும் சரத்பவாருக்கு எதிராக டுவிட்டரில் பதிவிட்டது தொடர்பாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்தனர்.
தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்த நிகில் பாம்ரே ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ஜாமீன் வழங்கிய கோர்ட்டு
மனு தொடர்பான விசாரணையை நீதிபதி நிதின் ஜம்தார் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஒரு சமூகவலைதளத்தில் விடுத்த பதிவிற்காக ஒரு மாதத்திற்கு மேலாக மாணவரை சிறையில் வைத்த விவகாரத்தில் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
ஜாமீன் தொடர்பான இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட மாணவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த நிபந்தனையில் நாசிக்கில் உள்ள திண்டோரி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.