ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல்; அலாரம் ஒலித்ததால் லட்சக்கணக்கான பணம் தப்பியது
பால்கர் மாவட்டம் வசாய் பகுதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல் அலார சத்தம் ஒலித்ததால் தப்பி ஓட்டம், இதையடுத்ட்ஹு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வசாய்,
பால்கர் மாவட்டம் வசாய் மேற்கு பபோலா பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று அதிகாலை 2 மணி அளவில் 4 பேர் முகமூடி அணிந்த நிலையில் ஏ.டி.எம் மையத்திற்கு வந்தனர். ஒருவர் மட்டும் வெளியே நின்றார். மற்ற 3 பேர் ஏ.டி.எம் மையத்தின் உள்ளே புகுந்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த இரும்பு கம்பியால் எந்திரத்தை உடைத்தனர். சுமார் அரை மணி நேரமாக போராடியும் அவர்களால் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் ஏ.டி.எம். மையத்தில் இருந்த அலாரம் ஒலித்தது. இதனால் பயந்து போன 4 பேரும் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பி சென்றனர். அலாரம் சத்தம்கேட்ட அக்கம் பக்கத்தினர் மாணிக்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்த போது எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை அடிக்கும் முயற்சி நடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் 3 பேர் எந்திரத்தை உடைக்கும் காட்சி கேமராவில் பதிவாகி இருந்தது. அலாரம் ஒலித்ததால் லட்சக்கணக்கிலான ரூபாய் கொள்ளை போகமால் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.