சோதனைக்கு வந்த இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகளை 6 மணி நேரமாக வீட்டுக்குள் விட மறுத்தவரால் பரபரப்பு


சோதனைக்கு வந்த இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகளை 6 மணி நேரமாக வீட்டுக்குள் விட மறுத்தவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் கதவை திறக்காமல் சோதனைக்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகளை 6 மணி நேரம் வெளியே காத்திருக்க வைத்தவரால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

வீட்டின் கதவை திறக்காமல் சோதனைக்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகளை 6 மணி நேரம் வெளியே காத்திருக்க வைத்தவரால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.

என்.ஐ.ஏ. அதிகாரிகள்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்பான வழக்கில் நேற்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் மராட்டியம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சோதனை நடத்தினர். இதில் மும்பை விக்ரோலி பார்க்சைட் பகுதியில் உள்ள அப்துல் வாகித் சேக் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், போலீசாருடன் நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்றனர். ஆனால் அப்துல் வாகித் சேக் அதிகாரிகளை சோதனை நடத்தவிடாமல் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "மும்பை ரெயில் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய அப்துல் வாகித் சேக் வீட்டுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள், போலீசாருடன் அதிகாலை 5 மணியளவில் சென்றனர். ஆனால் அப்துல் வாகித் சேக் கதவை திறக்கவில்ைல. அவர் அதிகாரிகளிடம் சோதனை நடத்துவதற்கான உத்தரவை கேட்டார். மேலும் அவர் அதிகாரிகளை சுமார் 6 மணி நேரம் வெளியே காத்திருக்க வைத்தார். இந்தநிலையில் அவரின் வக்கீல் மற்றும் சில ஆர்வலர்கள் வந்த பிறகு காலை 11.15 மணிக்கு தான் வீட்டு கதவை திறந்தார். இந்த சம்பவத்தால் அவரின் வீட்டின் முன் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்" என்றார். இந்த சம்பவத்தால் நேற்று மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டு வெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர்

அப்துல் வாகித் சேக் மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த மின்சார ரெயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர். ஆனால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். ரெயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 180 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story