நவிமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து- ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்
நவிமும்பை நெருலில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகினார். 7 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பை,
நவிமும்பை நெருலில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகினார். 7 பேர் படுகாயமடைந்தனர்.
காங்கிரீட் தளம் இடிந்தது
நவிமும்பை நெருல் செக்டர் 17-ம் பகுதியில் ஜிம்மி பார்க் சொசைட்டி என்ற 8 மாடி கட்டிடத்தில் 6-வது மாடியில் துளை போடும் எந்திரம் மூலம் பணி நடந்தது. அப்போது 6-வது மாடியின் காங்கிரீட் தளம் திடீரென இடிந்தது. இதன் இடிபாடுகள் 5-வது மாடியில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதன் பாரம் தாங்காமல் அந்த தளமும், அடுத்தடுத்து 4, 3, 2, 1-வது காங்கிரீட் தளமும் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழுந்தது.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் நவிமும்பை மாநகராட்சி மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
ஒருவர் பலி
இடிபாடுகளில் சிக்கி இருந்த 8 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மற்ற 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி நவிமும்பை மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பங்கார் கூறுகையில், "இந்த கட்டிடத்தில் வசிப்பவர்களை கடந்த மாதம் 18-ந் தேதி காலி செய்யும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. பழுதான நிலையில் இருந்த கட்டிடத்தில் துளை போட்டதால் விபத்து ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்" என்றார்.
மராட்டியத்தில் பருவமழை இன்று தொடங்கிய நிலையில், நவிமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.