போலி ஆவணம் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்ற ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் கைது - துபாய் செல்ல முயன்றபோது சிக்கினார்
போலி ஆவணம் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று துபாய் செல்ல முயன்ற ஆப்கானிஸ்தானை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மும்பை,
போலி ஆவணம் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று துபாய் செல்ல முயன்ற ஆப்கானிஸ்தானை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
பயணி மீது சந்தேகம்
மும்பை விமான நிலையத்தில் சம்பவத்தன்று துபாய் செல்ல இருந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சரிபார்த்து கொண்டு இருந்தனர். அப்போது 43 வயது நபர் ஒருவர் இந்திய பாஸ்போர்ட்டுடன் வந்தார். ஆனால் அவர் வெளிநாட்டினர் போல பேசினார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த அப்துல் கடாவாசய் (வயது43) என்பது தெரியவந்தது.
போலி பாஸ்போர்ட்
அவர் 2019-ம் ஆண்டு மருத்துவ விசா மூலம் இந்தியா வந்து உள்ளார். இருப்பினும் விசா காலம் முடிந்தும் ஆப்கானிஸ்தான் திரும்பவில்லை. போலி ஆவணங்கள் மூலம் கொல்கத்தாவில் அப்துல் ரெகுமான் என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட்டை வாங்கி இருக்கிறார். அதை பயன்படுத்தி துபாய் செல்ல முயன்ற போதுதான் அவர் போலீசாரிடம் சிக்கி உள்ளார். போலீசார் அப்துல் கடாவாசய் மீது மோசடி, இந்திய பாஸ்போர்ட் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அவர் எதற்காக இந்திய பாஸ்போர்ட் வாங்கினார், ஏன் துபாய் செல்ல முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.