நாலாச்சோப்ராவில் ஏஜெண்டை துப்பாக்கியால் சுட்டு பணப்பை பறிப்பு - 3 பேர் கைது
நாலாச்சோப்ராவில் ஏஜெண்டை துப்பாக்கியால் சுட்டு பணப்பையை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
நாலாச்சோப்ராவில் ஏஜெண்டை துப்பாக்கியால் சுட்டு பணப்பையை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
துப்பாக்கியால் சுட்டனர்
பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ரா கிழக்கு சந்தோஷ் பவன் பகுதியை சேர்ந்தவர் அஜய் பிரஜாபதி (வயது40). இவர் பணம் வசூலிக்கும் ஏஜெண்ட் ஆக இருந்து வருகிறார். இவர் நேற்று காலை 9.30 மணி அளவில் தானிவ்பாக் அருகே ஆட்டோவில் வந்து இறங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரில் ஒருவர் அஜய் பிரஜாபதியை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினார். மேலும் அவர் வைத்திருந்த பணப்பையை தரும்படி கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அஜய் பிரஜாபதி பணப்பையுடன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை கண்ட கும்பல் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
3 பேர் கைது
இதனால் குண்டு பாய்ந்த அஜய் பிரஜாபதி படுகாயமடைந்து கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய 3 பேரும் பணப்பையுடன் அங்கிருந்து தப்பி ஓடினர். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அப்பகுதிக்கு திரண்டு வந்தனர். படுகாயமடைந்த அஜய் பிரஜாபதியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த பெல்கார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆசாமிகளின் அடையாளம் தெரியவந்ததை தொடர்ந்து, அவர்கள் 3 பேரை பிடிக்க தேடிவந்தனர்.
சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் துப்பாக்கியால் சுட்ட ஜாவேத் கான், ரவீந்திரா அங்குஷ், சதாம் கான் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.