கடன் செயலியில் பணம் வாங்கிய பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்- ஏஜெண்டு கைது


கடன் செயலியில் பணம் வாங்கிய பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்- ஏஜெண்டு கைது
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் கடன் செயலியில் பணம் வாங்கிய பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பரப்பிய ஏஜெண்டு ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

ஆன்லைன் கடன் செயலியில் பணம் வாங்கிய பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பரப்பிய ஏஜெண்டு ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.


கடன் செயலி

மும்பை கல்பாதேவியில் உள்ள தாகுர்த்வார் பகுதியை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கு சம்பவத்தன்று திடீரென பணம் தேவைப்பட்டது. எனவே அவர் அவசரத்துக்கு 'கேஷ்ஸ்பாட்' என்ற ஆன்லைன் செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கடன் பெற்றார். கடன் வாங்கும் போதே சேவை கட்டணம், வட்டி என கூறி ரூ.1,000 பிடித்துவிட்டு ரூ.4 ஆயிரம் மட்டுமே பெண்ணின் பேடிஎம் கணக்கிற்கு வந்து உள்ளது. அவர் 5 நாட்களுக்குள் பணத்தை செலுத்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் பணம் வாங்கிய மறுநாளே ஆன்லைன் கடன்செயலியின் ஏஜெண்டு போன் செய்து உடனடியாக ரூ.7 ஆயிரம் தரவேண்டும் என கேட்டு உள்ளார். மேலும் பணத்தை கொடுக்கவில்லை எனில் உங்களது படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து குடும்பத்தினர், உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டினார். காலக்கெடு முடிவதற்குள் பணத்தை திரும்ப கேட்பதால் ரூ.4 ஆயிரம் மட்டும் தருவேன் என பெண் கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் கைது

இதனால் ஆத்திரமடைந்த ஆன்லைன் கடன் செயலி ஏஜெண்டு பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவரின் குடும்பத்தினருக்கு அனுப்பினார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் எல்.டி.மார்க் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பரப்பிய ஆன்லைன் கடன் செயலி ஏஜெண்டை தேடினர்.

இதில் அவர் ராஜஸ்தான் மாநிலம் சிக்ரி மாவட்டம் பாரத்பூரை சேர்ந்த காஷ்மீர் சிங் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் காஷ்மீர் சிங்கை கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.


Next Story