காந்தி குறித்து அவதூறாக பேசிய சம்பாஜி பிடே மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி
காந்தி குறித்து அவதூறாக பேசிய சம்பாஜி பிடே மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
காந்தி குறித்து அவதூறாக பேசிய சம்பாஜி பிடே மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்
வலதுசாரி அமைப்பு தலைவரான சம்பாஜி பிட அமராவதியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது மகாத்மா காந்தி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அவரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மராட்டியத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சம்பாஜி பிடே மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பாலாசாகிப் தோரட், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலோ நேற்று சம்பாஜி பிடே விவகாரத்தை சட்டசபையில் எழுப்பினர். பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ். தொடர்புடையவர் என்பதால் சம்பாஜி பிடே பாதுகாக்கப்படுவதாக நானா படோலே குற்றம்சாட்டினார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இந்தநிலையில் காந்தி குறித்து அவதூறாக பேசிய சம்பாஜி பிடே மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- சம்பாஜி பிடேவின் பேச்சை கண்டிக்கிறேன். மகாத்மா காந்தி தேசத்தந்தை. விடுதலை போராட்டத்தின் மகா நாயகன். மகா நாயகனுக்கு எதிராக அதுபோல பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. சம்பாஜி பிடே அல்லது யாராக இருந்தாலும் மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது என்பதை தெளியாக கூறிக்கொள்கிறேன். காந்தியை அவமதிப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கில் போலீசார் சரியான நடவடிக்கை எடுப்பார்கள். சம்பாஜி பிடே தனியாக (ஸ்ரீ சிவ் பிரதிஷ்தான் இந்துஸ்தான்) அமைப்பு நடத்தி வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூசக்கூடாது. சம்பாஜி பிடேவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினர், சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் பேச்சுக்கும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.