முதல்-மந்திரி ஷிண்டே வெளிநாட்டு பயணம் திடீர் தள்ளிவைப்பு
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் வெளிநாட்டு பயணம் திடீரென தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் வெளிநாட்டு பயணம் திடீரென தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
வெளிநாட்டு பயணம்
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். இந்தநிலையில் முதல்-மந்திரியின் வெளிநாட்டு பயணம் குறித்து நேற்று முன்தினம் எக்ஸ் தளத்தில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்ய தாக்கரே பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். முதல்-மந்திரியின் வெளிநாட்டு பயணம் குறித்த கால அட்டவணை, அவர் யார்- யாரை சந்தித்து பேசுகிறார் போன்ற விவரங்கள் ஏன் வெளியிடப்படவில்லை என அவர் கேட்டு இருந்தார். மேலும் மக்களின் வரிப்பணத்தில் செல்லும் முதல்-மந்திரியின் வெளிநாட்டு பயணம் வெறுமனமே சுற்றுலா சென்று வருவது போல இருந்துவிடக்கூடாது எனவும் தெரிவித்து இருந்தார். முதல்-மந்திரியின் வெளிநாட்டு பயணம் குறித்த படங்கள், சந்திப்புகள் விவரங்களை முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.
தள்ளிவைப்பு
இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் வெளிநாட்டு பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முதல்-மந்திரியின் வெளிநாட்டு பயணம் தொடர்பான புதிய தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என முதல்-மந்திரி அலுவலக அதிகாரி ஒருவர் கூறினார்.