போலீஸ் வாகனம் மீது மரம் விழுந்து அதிகாரி உள்பட 2 போலீசார் பலி - ஜல்காவ் அருகே சோகம்
ஜல்காவ் அருகே போலீஸ் வாகனம் மீது மரம் விழுந்ததில் உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் பலியாகினர். காயமடைந்த 3 போலீசாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை,
ஜல்காவ் அருகே போலீஸ் வாகனம் மீது மரம் விழுந்ததில் உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் பலியாகினர். காயமடைந்த 3 போலீசாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் வாகனம் மீது மரம் விழுந்தது
ஜல்காவில் பொருளாதார குற்ற பிரிவில் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சுதர்சன் தாதிர் (வயது36). இவர் நேற்று முன்தினம் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக போலீஸ்காரர் அஜய் சவுத்ரி (38) மற்றும் 3 போலீசாருடன் வாகனத்தில் புறப்பட்டு சென்றார். அஞ்சனி அணைக்கட்டு பகுதியை தாண்டி இரண்டோல்-கசோடா சாலையில் இரவு 8.30 மணி அளவில் சென்றபோது, திடீரென சாலையோர பழமையான புளியமரம் ஒன்று வேறோடு சாய்ந்து போலீஸ் வாகனம் மீது விழுந்தது. இதில் போலீஸ் வாகனம் சுக்குநூறாக நொறுங்கியது.
2 போலீசார் பலி
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 5 போலீசாரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். மரத்தின் அடியில் சிக்கி நொறுங்கிய வாகனத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த போலீசாரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு மரத்தை அகற்றி, வாகனத்தில் சிக்கிய 5 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் செல்லும் வழியிலேயே உதவி இன்ஸ்பெக்டர் சுதர்சன் தாதிர், போலீஸ்காரர் அஜய் சவுத்ரி ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்ற 3 போலீசாருக்கும் ஜல்காவ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மராட்டியத்தில் போலீஸ் வாகனம் மீது மரம் விழுந்து உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.