போலீஸ் நிலையம் படியேறியதற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தொழிலாளி குடும்பம் - 23 பேர் மீது வழக்குப்பதிவு
குடும்ப பிரச்சினையில் போலீஸ் நிலைய படியேறிய தொழிலாளி குடும்பத்தை சாதி பஞ்சாயத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இது தொடர்பாக 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை,
குடும்ப பிரச்சினையில் போலீஸ் நிலைய படியேறிய தொழிலாளி குடும்பத்தை சாதி பஞ்சாயத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இது தொடர்பாக 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீசில் புகார்
அகமதுநகர் மாவட்டம் ஜாம்கேத் பகுதியில் உள்ள அரோல் வஸ்தி பகுதியை சேர்ந்த 50 வயது தொழிலாளி ஒருவர், சாதி பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் தன்னையும், தனது குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக தொழிலாளி தனது புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது மகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மகளின் மாமியார் அவளை கொடுமைப்படுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் எனது மகள் வீட்டை விட்டு வெளியேறி எங்களுடன் வந்து வசிக்க தொடங்கினாள். அதன்பிறகும் கொடுமை தொடரவே மாமியார் மீது போலீசில் புகார் அளித்தார்.
ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்
இந்த விவகாரத்தை அறிந்த 'நாத் பந்தி தாவரி கோசாவி' சமூகத்தின் சாதி பஞ்சாயத்து உறுப்பினர்கள் பவர்வாடி வனப்பகுதியில் நடைபெற்ற பஞ்சாயத்துக்கு என்னை அழைத்தனர். அப்போது போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்ததற்காக என்னை கடுமையாக திட்டினர். இவ்வாறு புகார் அளிப்பது சாதி விதிகளுக்கு எதிரானது என கூறி புகாரை திரும்பி பெறுமாறு தெரிவித்தனர். அவ்வாறு செய்யாவிட்டால் எனது குடும்ப உருப்பினர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதுடன் ரூ.3 லட்சம் அபராதம் விதிப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர்களின் மிரட்டலுக்கு நான் பணிய மறுத்த காரணத்தால் என்னையும் எனது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டினர். இவ்வாறு அவர் தனது புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தொழிலாளியின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.