அவுரங்காபாத் பெயரை மாற்றும் அரசின் முடிவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
அவுரங்காபாத்தின் பெயரை மாற்றும் மராட்டிய அரசின் முடிவை எதிர்த்து ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
அவுரங்காபாத்தின் பெயரை மாற்றும் மராட்டிய அரசின் முடிவை எதிர்த்து ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுநலன் மனு
முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய மகா விகாஸ் அகாடி ஆட்சியின் கடைசி மந்திரிசபை கூட்டத்தில் அவுரங்காபாத் நகரை சம்பாஜிநகர் என மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து முதல்-மந்திரியாக பதவி ஏற்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு இந்த மாத தொடக்கத்தில் நகரை "சத்ரபதி சம்பாஜிநகர்" என மாற்றும் முடிவை மீண்டும் அறிவித்தது.
இந்த பெயர் மாற்ற முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுரங்காபாத்தில் வசிக்கும் முகமது முஷ்டாக் அகமது, அன்னாசாகேப் கந்தாரே மற்றும் ராஜேஷ் மோரே ஆகியோர் ஐகோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்தனர்.
அரசியல் நோக்கம்
அவர்கள் தங்கள் மனுவில், "உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு அரசியல் உள்நோக்கத்துடன் அவுரங்காபாத் பெயரை மாற்றும் பிரச்சினையை எழுப்பியது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான தற்போதைய அரசு, மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல், அரசியலமைப்பின் விதிகளை முற்றிலும் புறக்கணித்து இந்த முடிவை எடுத்துள்ளது.
அவுரங்காபாத் நகரம் வரலாற்றின் ஒரு பகுதி மற்றும் வளமான கலாசாரம் கொண்டது. சிவசேனா போன்ற கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக இந்த பெயரை மாற்ற முயற்சிக்கின்றன.
அரசியல் ஆதாயம் பெறுவதும், முஸ்லிம்கள் மீது சமூகத்தினரிடையே வெறுப்பை பரப்புவதுமே அவுரங்காபாத் பெயரை மாற்றியதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.