நண்பரை கொலை செய்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் - கோர்ட்டு தீர்ப்பு
தானே மாவட்டம் பயந்தரில் நண்பரை கொலை செய்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டணை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
தானே,
தானே மாவட்டம் பயந்தரை சேர்ந்தவர் சந்திப். இவர் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி நண்பர்களான அச்யுதம் சவுபே, விவேக் சிங் ஆகியோரை மது குடிக்க அழைத்து உள்ளார். பின்னர் 3 பேரும் சேர்ந்து மது குடித்தனர். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சந்திப் உருட்டு கட்டையால் 2 பேரையும் தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அச்யுதம் சவுபே உயிரிழந்தார். விவேக் சிங் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சந்திப்பை கைது செய்தனர். அவர் மீது தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது 12 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து குற்றவாளியான சந்திப்புக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.