போலி ஆவணங்களை பயன்படுத்தி வாடகைக்கு எடுத்த காரை விற்ற 7 பேர் கைது
மும்பையில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வாடகைக்கு காரை எடுத்து விற்று வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்
மும்பை,
மும்பையை சேர்ந்த கார் டீலர் ஒருவரை அண்மையில் பர்தா அணிந்து வந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் சேர்ந்து அணுகி 2 நாட்களுக்கு வாடகைக்கு கார் தருமாறு கேட்டனர். அவரும் அவர்களிடம் இருந்து சில ஆவணங்களை பெற்றுக்கொண்டு வாடகைக்கு காரை கொடுத்து உள்ளார். ஆனால் குறிப்பிட்ட தேதியில் கார் திரும்பி கிடைக்கவில்லை. எனவே காரை எடுத்து சென்றவர்களை அவர் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார் டீலர் மும்பை நாக்பாடா போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். இந்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஜூனத்கான் (வயது30), தியா சச்தேவ் (21), சதாப் சேக் (34), சல்மான் சையத் (23), அமீன் சேக் (28), ரகீல்கான் (29), சுவப்னில் துலே (25) ஆகிய 7 பேர் கொண்ட கும்பல் வாடகைக்கு காரை பெற்று அதனை போலி ஆவணங்கள் தயாரித்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 7 பேரை கைது செய்தனர். இவர்கள் மும்பை, தானே பகுதிகளிலும் மேலும் பலரிடம் இதேபாணியில் காரை வாடகைக்கு எடுத்து தங்கள் கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து திருடப்பட்ட 3 உயர் ரக கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ்காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.