விமான நிலையத்தில் 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; விமான ஊழியர் உள்பட 6 பேர் கைது
மும்பை விமான நிலையத்தில் 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான ஊழியர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான ஊழியர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
விமான ஊழியர் சிக்கினார்
துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் சம்பவத்தன்று மும்பை வந்த விமான பயணிகளிடம் சோதனை போட்டனர். இதில் எதுவும் சிக்காததால் விமானத்தின் உள்ளே ஏறி சோதனை போட முயன்றனர். அப்போது விமான நிறுவன ஊழியர் உமர் மோயின் சேக் (வயது26) என்பவர் அதிகாரிகளை கண்ட உடன் அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றார். சந்தேகம் அடைந்து அவரை பிடித்து சோதனை போட்டனர். அவர் ஷூவில் மறைத்து வைத்து இருந்த 1 கிலோ 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் யாசிர் தாபேதார் (27) என்பவரிடம் தங்கத்தை ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்தனர்.
7 கிலோ தங்கம் பறிமுதல்
இதேபோல பயணிகளான ஜமீர் தாம்பே (23), அம்ருத்லால் (54) மற்றும் அவரது மகன் கிஷோர் (29) ஆகியோரும் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து கல்பாதேவியை சேர்ந்த மோகித் லால்வானி என்பவர் கடத்தல் தங்கத்தை பெற வந்துள்ளார். அதிகாரிகள் இவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 288 கிராம் கடத்தல் தங்கம், ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்த 6 பேரிடம் இருந்து மொத்தம் 7 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.4 கோடியே 50 லட்சம் ஆகும். இது குறித்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.