6 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை- வெறிச்செயலில் ஈடுபட்ட தாய் கைது


6 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை- வெறிச்செயலில் ஈடுபட்ட தாய் கைது
x

ராய்காட் அருகே சோக சம்பவமாக 6 குழந்தைகளை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொன்றார். அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

ராய்காட் அருகே சோக சம்பவமாக 6 குழந்தைகளை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொன்றார். அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நல்லதங்காள் கதையை மெய்பிக்கும் சோகம்

நல்ல தங்காள் கதையை விட இன்னொரு சோக கதையை கேள்விப்பட்டு இருக்க முடியாது. நல்ல தங்காள் வறுமையின் காரணமாகவும், தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற 7 பிள்ளைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, பின்னர் தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தான் இந்த கதையின் உச்சக்கட்ட சோகம். பெருந்துயரத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த கதை சொல்லப்பட்டு வந்தாலும், தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவமாகவே நம்பப்படுகிறது.

இதை மெய்பிக்கும் வகையில் மராட்டியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெற்ற தாயே தனது 6 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. ராய்காட் மாவட்டம் மகாட் தாலுகா கரவாலி கிராமத்தில் தான் இந்த சோகம் அரங்கேறி உள்ளது.

குடிகார கணவர்

இந்த கிராமத்தில் வசித்து வருபவர் சிக்குரி. கொத்தனார். இவரது மனைவி ருணா ஷானி (வயது32). இ்ந்த தம்பதிக்கு 5 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உண்டு. அனைவரும் 1½ வயது முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள்.

ருணா ஷானியின் கணவர் மது பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். குடும்பம் வறுமையில் வாடியதாக கூறப்படுகிறது. நேற்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ருணா ஷானி, தனது 6 குழந்தைகளையும் கிராமம் அருகே உள்ள கிணற்றுக்கு அழைத்து சென்றார். அங்கு தனது நெஞ்சை கல்லாக்கி கொண்டு அத்தனை குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றில் தூக்கி போட்டார். பின்னர் அவரும் கிணற்றில் குதித்துவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் சிலர் ஓடோடி வந்தனர். அவர்கள் கிணற்றில் குதித்த ருணா ஷானியை மீட்டனர். அப்போது அந்த பெண் தன்னை சாக விடுமாறு மல்லுக்கட்டி உள்ளார். ஆனாலும் கிராமத்தினர் அவரை வலுக்கட்டாயமாக வெளியே தூக்கி வந்து காப்பாற்றினர்.

6 குழந்தைகள் பிணமாக மீட்பு

மேலும் கிணற்றில் மூழ்கிய 6 குழந்தைகளையும் அவர்களால் பிணமாக தான் மீட்க முடிந்தது. இதுபற்றி அறிந்த போலீசார் விரைந்து சென்று குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி, ருணா ஷானியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது கணவரை பழிவாங்கும் நோக்கத்தில் இந்த விபரீத செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

பெற்ற பிள்ளைகள் 6 பேரை கிணற்றில் வீசி கொன்ற ருணா ஷானி மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

சந்தேகத்தீ காரணம்?

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிக்குரி-ருணா ஷானி தம்பதியினர் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர்கள். இந்த தம்பதியர் தங்களது குழந்தைகளுடன் சில ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி மராட்டியத்திற்கு வந்துள்ளனர். கணவர் சிக்குரி குடி பழக்கத்தை கைவிடாமல் மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன் இவர்கள் வீடு மாறி உள்ளனர். அந்த வீட்டையொட்டி திருமணம் ஆகாத வாலிபர்கள் சிலர் வசித்து வந்துள்ளனர். அந்த வாலிபர்களுடன் ருணா ஷானி பழகி வந்ததால், அது கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவும் இந்த விபரீத செயலுக்கு காரணமாக இருக்கும் என்று நம்புகிறோம். ருணா ஷானி கணவர் மீது புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதற்கிடையே கைதான ருணா ஷானியை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 4-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

பெற்ற தாயே 6 குழந்தைகளை கொன்ற சம்பவம் மராட்டியத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

---------------------


Next Story