நாசிக் அருகே, குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.5.94 கோடி போதைப்பொருள் பறிமுதல் - 3 பேருக்கு வலைவீச்சு


நாசிக் அருகே, குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.5.94 கோடி போதைப்பொருள் பறிமுதல் - 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Oct 2023 7:45 PM GMT (Updated: 8 Oct 2023 7:45 PM GMT)

நாசிக் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 கோடியே 94 லட்சம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

நாசிக்,

நாசிக் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 கோடியே 94 லட்சம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

குடோனில் சோதனை

நாசிக் மாவட்டம் ஷிண்டே கிராமத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் அங்கு தயாரிக்கப்பட்டு இருந்த ரூ.300 கோடி மதிப்புள்ள மெபட்ரோன் என்ற போதைப்பொருளை சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நடவடிக்கைக்கு பிறகு அந்த கிராமத்தில் மூடப்பட்ட கடைகள், வீடுகள் மற்றும் குடோன்கள் தவிர பயன்படுத்தாத இடங்களில் சோதனை நடத்துமாறு துணை போலீஸ் கமிஷனர் மோனிகா ராவத் உத்தரவிட்டு இருந்தார்.

ரூ.5.94 கோடி பறிமுதல்

இந்த உத்தரவின் பேரில் அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடோன் ஒன்று வாடகைக்கு விடப்பட்டதாகவும், ஒரு வாரமாக மூடி கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்த குடோனை திறந்து பார்த்தபோது பிளாஸ்டிக் டிரம்களில் 4 கிலோ 87 கிராம் எடையுள்ள போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடியே 94 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போதைப்பொருள் பதுக்கலில் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story