அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மந்திரி நவாப் மாலிக்கிற்கு 2 மாதம் ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மந்திரி நவாப் மாலிக்கிற்கு 2 மாதம் ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Aug 2023 8:00 PM GMT (Updated: 11 Aug 2023 8:01 PM GMT)

அமலாக்கத்துறை வழக்கில் மருத்துவ காரணங்களுக்காக மராட்டிய முன்னாள் மந்திரி நவாப் மாலிக்கிற்கு 2 மாத ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

அமலாக்கத்துறை வழக்கில் மருத்துவ காரணங்களுக்காக மராட்டிய முன்னாள் மந்திரி நவாப் மாலிக்கிற்கு 2 மாத ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மந்திரியாக இருந்தபோது கைது

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியும், நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகிம் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ), வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான நவாப் மாலிக் இடையே சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை கண்டறிந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தவ் தாக்கரே அரசில் மந்திரி பதவி வகித்தபோது நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. விசாரணைக்கு பிறகு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார்.

இடைக்கால ஜாமீன்

இந்தநிலையில் மருத்துவ காரணங்களுக்காக தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி நவாப் மாலிக் தாக்கல் செய்த மனுவை சமீபத்தில் மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில் தகுதியின் அடிப்படையில் கோரிய வழக்கமான ஜாமீன் மனு மீதான விசாரணையை ஐகோர்ட்டு தள்ளி வைத்தது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ், திரிவேதி ஆகியோர் விசாரித்தனர். அப்போது மருத்துவ காரணங்களுக்காக நவாப் மாலிக்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே நவாப் மாலிக்கிற்கு 2 மாத காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இந்த ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர். நவாப் மாலிக் தற்போது நீதிமன்ற காவலில் மும்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story