மும்பை- கோவா நெடுஞ்சாலையில் அரசு பஸ் மீது கார் மோதி 2 பேர் பலி- 3 பேர் படுகாயம்
மும்பை - கோவா நெடுஞ்சாலையில் அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பை,
மும்பை - கோவா நெடுஞ்சாலையில் அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்தனர்.
அரசு பஸ் மீது மோதியது
அம்பர்நாத்தை சேர்ந்தவர் ஜெய்வந்த் சாவந்த் (வயது 60). இவர் விநாயகர் சதுா்த்தியை கொண்டாட நேற்று அதிகாலை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் காரில் கொங்கன் பகுதிக்கு சென்றார்.
நேற்று காலை கார் மும்பை- கோவா நெடுஞ்சாலையில் ராய்காட் மாவட்டம் போலட்புர் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது கார், முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் அதில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.
2 பேர் பலி
தகவல் அறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு காமோதே பகுதியில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெய்வந்த் சாவந்த், மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த கிரன் காகே (28) ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த ஜெயஸ்ரீ சாவந்த், கிரிஷ் சாவந்த் மற்றும் பத்லாப்பூரை சேர்ந்த அமித் பிதாலேவுக்கு (30) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஸ்சில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து ராய்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.