மாநிலம் முழுவதும் விநாயகர் சிலைகள் கரைப்பின் போது 19 பக்தர்கள் பலி


மாநிலம் முழுவதும் விநாயகர் சிலைகள் கரைப்பின் போது 19 பக்தர்கள் பலி
x

மராட்டியத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பின் போது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 19 பக்தர்கள் பலியானார்கள். 11 பேர் மின்சாரம் தாக்கி காயம் அடைந்தனர்.

மும்பை,

மராட்டியத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பின் போது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 19 பக்தர்கள் பலியானார்கள். 11 பேர் மின்சாரம் தாக்கி காயம் அடைந்தனர்.

சிலைகள் கரைப்பு

மராட்டியத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் ஆனந்த சதுர்த்தி எனப்படும் சிலை கரைப்பு தினத்துடன் 10 நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முடிவுக்கு வந்தது.

ஆனந்த சதுர்த்தியையொட்டி மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கொரோனா கட்டுப்பாடுகளால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த விநாயகர் சிலை ஊர்வலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

19 பேர் பலி

இந்தநிலையில் மராட்டியத்தில் சிலை கரைப்பின் போது 19 பக்தர்கள் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 14 பேர் நீர்நிலைகளில் மூழ்கி பலியானது தெரியவந்து உள்ளது.

வார்தா மாவட்டத்தில் சாவங்கி பகுதியில் 3 பேரும், தேவ்லி பகுதியில் ஒருவரும் சிலையை கரைக்கும் போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல யவத்மால் மாவட்டத்தில் சிலை கரைக்க சென்ற போது குளத்தில் மூழ்கி 2 பேர் பலியானார். இதுதவிர அகமதுநகரில் இருவேறு இடங்களில் 2 பேரும், ஜல்காவில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதேபோல புனே ஊரகப்பகுதி, துலே, சத்தாரா, சோலாப்பூர் ஆகிய இடங்களில் தலா ஒருவர் சிலை கரைப்பின் போது உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஒரே குடும்பத்தில் 4 பேர்

நாக்பூர் மாவட்டம் சக்கர்தாரா பகுதியில் மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய், மகன் மற்றும் 11, 5 வயது சிறுவர்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை விபத்தில் சிக்கி சிலை கரைக்க சென்ற 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தானே கோல்பாட் பகுதியில் மரம் சரிந்து கணபதி மண்டல் மீது விழுந்த விபத்தில் 55 வயது பெண் ராஜஸ்ரீ பலியானார். மேலும் 4 போ் காயமடைந்தனர். சிலை கரைப்பதற்கு முன் விநாயகருக்கு பூஜை நடந்து கொண்டு இருந்த போது இந்த துயரம் நடந்தது.

இதேபோல பன்வெல், வாத்கார் கோலிவாடாவில் மின் வயர் அறுந்து விழுந்ததில் சிலை கரைக்க சென்ற 11 பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 9 மாத பெண் குழந்தையும் அடங்கும்.

தகராறு

இதுதவிர மாநிலத்தில் சிலை கரைப்பின் போது ஒரு சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்பட்டன. அகமதுநகரில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

ஜல்காவில் ஒரு கும்பல் மேயர் பங்களா மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல புனே நகர், ஊரகப்பகுதி, சந்திராப்பூர் ஆகிய இடங்களிலும் இரு தரப்பினர் இடையே சிறு, சிறு மோதல்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story