ரூ.18 ஆயிரம் கோடியில் நடந்து வரும் சுகாதார திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, ஷிண்டே உத்தரவு
மாநிலத்தில் ரூ.18 ஆயிரம் கோடி அளவில் நடந்து வரும் சுகாதார திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
மும்பை,
மாநிலத்தில் ரூ.18 ஆயிரம் கோடி அளவில் நடந்து வரும் சுகாதார திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
விரைந்து முடிக்க உத்தரவு
மராட்டியத்தில் கடந்த 30-ந் தேதி நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 24 நோயாளிகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இதேபோல சமீபத்தில் சத்ரபதி சம்பாஜி நகர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தானே மாவட்டம் கல்வா பகுதியில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியிலும் ஒரேநாளில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் உயிரிழந்தனர். மருத்துவ சேவை குறைபாடு காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை, மருத்துவ கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோனையின்போது அவர் மாநிலத்தில் நடந்து வரும் ஆஸ்பத்திரி கட்டுதல், மருந்து வாங்குதல், 18 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட ரூ.18 ஆயிரம் கோடி அளவிலான சுகாதார திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
34 மாவட்டங்களில் அரசு ஆஸ்பத்திரி
இதுகுறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரூ.8 ஆயிரத்து 331 கோடி செலவில் ஆம்புலன்ஸ், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 141 சுகாதார நிலையங்கள் கட்ட வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு கழகம் ரூ.3 ஆயிரத்து 948 கோடியை ஒதுக்கி உள்ளது. விரைவில் அந்த சுகாதார நிலையங்கள் கட்டப்படும். புதிய மருத்துவ மற்றும் சுகாதார நிறுவனங்கள் அமைக்க ஆசியன் மேம்பாட்டு வங்கியிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 177 கோடி வாங்கப்பட உள்ளது. மத்திய அரசும் இதற்காக கூடுதல் நிதி வழங்க உள்ளது. இந்த தொகையை 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பயன்படுத்த முதல்-மந்திரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். 34 மாவட்டங்களில் அரசு ஆஸ்பத்திரி அமைக்கவும் 15 நாளில் திட்டத்தை சமர்பிக்க மருத்துவ கல்வி துறைக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.