அரசின் திட்டங்கள் மூலம் 1½ கோடி பேர் நேரடியாக பலன் அடைந்து உள்ளனர் - ஏக்நாத் ஷிண்டே பெருமிதம்


அரசின் திட்டங்கள் மூலம் 1½ கோடி பேர் நேரடியாக பலன் அடைந்து உள்ளனர் - ஏக்நாத் ஷிண்டே பெருமிதம்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:45 AM IST (Updated: 16 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் அரசின் திட்டங்கள் மூலம் 1½ கோடி பேர் நேரடியாக பலன் அடைந்து உள்ளனர் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் அரசின் திட்டங்கள் மூலம் 1½ கோடி பேர் நேரடியாக பலன் அடைந்து உள்ளனர் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டம்

நாட்டின் சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மராட்டியத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மும்பையில் உள்ள மந்திராலயாவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாைத செலுத்தினார். துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூரிலும், அஜித்பவார் கோலாப்பூரிலும் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தனர். இதேபோல ஒவ்வொறு மாவட்டத்திலும் பொறுப்பு மந்திரிகள் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

ஊழல் பூச்சிகள் அழிப்பு

மந்திராலயாவில் தேசிக்கொடியை ஏற்றி வைத்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு திறமையான நிர்வாகம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார். அதன்படி அவர் தற்போது ஊழல் பூச்சிகளை அழித்து உள்ளார். முன்பு அரசு நலத்திட்டங்களுக்கு ரூ.1 ஒதுக்கினால் 15 பைசா தான் மக்களுக்கு சென்றடையும். தற்போது மக்களுக்கு வங்கி கணக்கு மூலம் நேரடியாக நலத்திட்ட உதவிகள் சென்றடைகின்றன. இதன் மூலம் அரசு ஒதுக்கும் ரூ.1 முழுமையாக பொதுமக்களை சென்றடைகிறது.

1½ லட்சம் மக்கள் பலன்

மராட்டியத்தில் கடந்த ஒரு ஆண்டாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக வளர்ச்சி பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் வாழ்வை மாற்றவும், பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வரும் சமூகத்தினருக்கு நீதி வழங்கவும் கடுமையாக முயற்சி செய்து வருகிறோம். மராட்டியத்தில் அரசின் திட்டங்கள் மூலம் 1½ கோடி பேர் நேரடியாக பலன் அடைந்து உள்ளனர். அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டை பெறுவதில் மராட்டியம் முன்னணி மாநிலமாக உள்ளது. வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ஏக்நாத் ஷிண்டே மும்பை ஐகோர்ட்டு, வர்ஷா பங்களாவிலும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


Next Story