கடற்கரை சாலை திட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த 184 மீனவர்களுக்கு ரூ.11 கோடி இழப்பீடு; மாநகராட்சி தகவல்


கடற்கரை சாலை திட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த 184 மீனவர்களுக்கு ரூ.11 கோடி இழப்பீடு; மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 23 Aug 2023 7:00 PM GMT (Updated: 23 Aug 2023 7:00 PM GMT)

கடற்கரை சாலை திட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த 184 மீனவர்களுக்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

மும்பை,

கடற்கரை சாலை திட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த 184 மீனவர்களுக்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

கடற்கரை சாலை திட்டம்

மும்பை மெரின்லைனில் இருந்து காந்திவிலி வரையில் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் கடற்கரை சாலை வழி திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக ஒர்லியில் இருந்து கடல் வழியாக கடற்கரை சாலை திட்டம் சுமார் 10.98 கி.மீ. தூரம் வரையில் அமைய உள்ளது. இந்த சாலை லோட்டஸ் ஜெட்டி மீன்பிடி துறைமுகம் வழியாக செல்வதால் அங்கு வசித்து வந்த மீனவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் வாழ்வாதாரம் இழந்த மீனவர்களுக்கு ஏற்படும் இழப்பை கண்டறிய கடந்த 2021-ம் ஆண்டு டாடா சமூக அறிவியல் நிறுவன வல்லுனர் குழுவை மாநகராட்சி நியமித்தது.

ரூ.11 கோடி இழப்பீடு

இதனை தொடர்ந்து வாழ்வாதாரம் இழந்த மீனவர்களின் பட்டியலை மாநில அரசின் மீன்வளத்துறைக்கு மாநகராட்சி அனுப்பியது. அதனை ஏற்று இழப்பீடு வழங்க மீன்வளத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து பட்டியலில் முதற்கட்டமாக உள்ள 184 மீனவர்களுக்கு ரூ.11 கோடி வழங்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த மாத இறுதிக்குள் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது. நிதியை வழங்கும் முன்பு வங்கி கணக்கில் உள்ள பெயர்கள், தனிநபர் விவரங்களை முழுமையாக உறுதிப்படுத்தி வருகிறோம். இரண்டாவது கட்டமாக 336 மீனவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும்" என்றார்.


Next Story