காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி; கிராம மக்கள் பீதி


காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி; கிராம மக்கள் பீதி
x

திதிமதி அருகே காட்டுயானை தாக்கி தொழிலாளி ஒருவர் பலியானார். இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

குடகு:

கூலி தொழிலாளி

குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா திதிமதி அருகே கோனனகட்டே கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மரபாலா கிராமத்தைச் சேர்ந்தவர் சாமண்ணா(வயது 47). தொழிலாளி. இவர் காலையில் பாலலே கிராமத்தில் இருந்து திதிமதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் திதிமதி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டுயானை, திதிமதி அருகே ஹராத் சாலையில் உள்ள ஒரு காபித்தோட்டத்தில் பதுங்கி இருந்தது. இந்த நிலையில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சாமண்ணா சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென காபித்தோட்டத்தில் பதுங்கி இருந்த காட்டுயானை சாலைக்கு வந்தது. காட்டுயானை வருவதைப் பார்த்த சாமண்ணா உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

காட்டுயானை தாக்கியது

ஆனால் அந்த காட்டுயானை அவரை விடாமல் துரத்திச் சென்று தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதில் நிலைகுலைந்து விழுந்த சாமண்ணாவை காட்டுயானை காலால் மிதித்தது. இதற்கிடையே அந்த வழியாக 2 வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் காட்டுயானையின் அட்டகாசத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு வந்த வழியே தப்பிச் சென்றுவிட்டனர்.

இதற்கிடையே அந்த காட்டுயானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் சாமண்ணாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாவு

ஆஸ்பத்திரியில் சாமண்ணாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். காட்டுயானையின் அட்டகாசத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.


Next Story