குளத்தில் குதித்து பெண் தற்கொலை: கணவரிடம் போலீஸ் விசாரணை
குடும்பத்தகராறு காரணமாக குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக போலீசார் கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோலார் தங்கவயல்:
குடும்ப தகராறு
கோலார்(மாவட்டம்) தாலுகா கேலனூரு கிராமத்தை சேர்ந்தவர் சுதா(வயது 36). இவருக்கும், மாலூர் தாலுகா ஆவணியை சேர்ந்த அசோக் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடத்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில
ஆண்டுகள் இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் இருவரும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுதா வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அசோக், அப்பகுதியில் தேடிப்பார்த்தார். ஆனால் சுதா கிடைக்கவில்லை.
குளத்தில் குதித்து தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலை ஆவணி அருகே உள்ள ஒரு குளத்தில் சுதா பிணமாக மிதப்பதை அப்பகுதியினர் பாா்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவா்கள் அசோக்கிற்கும், முல்பாகல் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் போில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, சுதாவின் தாயார் முல்பாகல் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவுக்கு அவரது கணவன் அசோக் தான் காரணம். எனவே, அசோக்கை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அசோக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.