முன்னாள் எம்.எல்.ஏ.வை கிராம மக்கள் முற்றுகை; போலீஸ் தடியடி


முன்னாள் எம்.எல்.ஏ.வை கிராம மக்கள் முற்றுகை; போலீஸ் தடியடி
x

பெண்ணை மிரட்டி நிலத்தை எழுதி வாங்கிய விவகாரம் தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.வை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

கோலார் தங்கவயல்:

முன்னாள் எம்.எல்.ஏ.

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நாராயணசாமி. தற்போது இவர் பா.ஜனதா கட்சியில் அங்கம் வகித்து வருகிறார். இவர், கோலார் தாலுகா ஸ்ரீராம்புரா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டி நிலத்தை தனது பெயருக்கு எழுதி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்னாள் எம்.எல்.ஏ. நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்க வந்தார்.

அப்போது ஸ்ரீராம்புரா கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பத்திரியாளர் பவனுக்குள் நுழைந்து பெண்ணை மிரட்டி நிலத்தை எழுதி வாங்கியது குறித்து கேள்வி எழுப்பி நியாயம் கேட்டனர்.

முற்றுகை

அப்போது 'உங்களிடம் பேச முடியாது. வெளியில் செல்லுங்கள்' என்று நாராயணசாமி கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கிராம மக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. நாராயணசாமியை முற்றுகையிட்டனர். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால், அங்கு மேலும் பதற்றம் நிலவியது.

இதற்கிடையே முன்னாள் எம்.எல்.ஏ. நாராயணசாமியின் ஆதரவாளர்களுக்கும், ஸ்ரீராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ள உண்டானது. உடனே கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். விரைந்து வந்த போலீசார் தடியடி நடத்தி ஸ்ரீராம்புரா கிராம மக்களை விரட்டி அடித்தனர். பின்னர் ஒரு வழியாக முன்னாள் எம்.எல்.ஏ. நாராயணசாமியை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Next Story