சா.ரா.மகேஷ்-ஜி.டி.தேவேகவுடா திடீர் சந்திப்பு


சா.ரா.மகேஷ்-ஜி.டி.தேவேகவுடா திடீர் சந்திப்பு
x

சா.ரா மகேஷ் மற்றும் ஜி.டி தேவேகவுடா இருவரும் நேரில் சந்தித்து கொண்டிருப்பதால் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மைசூரு;

மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜி.டி.தேவேகவுடா. இவர், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் எம்.எல்.ஏ. ஆனார். ஆனால் சமீபகாலமாக அவர், ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் நடக்கும் கூட்டம், விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். இதன்காரணமாக அவர் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு கட்சியில் சேருவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ.வும், ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.வும் ைமசூருவில் தனியார் ஓட்டலில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன. அப்போது சா.ரா.மகேஷ், ஜி.டி.தேவேகவுடாவை அன்பாக வரவேற்று சால்வை அணிவித்தாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து இருவரும் சுமார் 2 மணிநேரம் தனி அறையில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின்போது சா.ரா.மகேஷ், ஜி.டி.தேவேகவுடாவிடம் ஜனதாதளம்(எஸ்) கட்சியிலேயே தொடர்ந்து நீடிக்கும்படியும், வேறு கட்சியில் சேரவேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஜி.டி.தேவேகவுடா, ஜனதாதளம்(எஸ்) கட்சியில் தொடர்ந்து நீடிக்க முடிவு செய்துள்ளாரா என்று கேள்வி எழுந்துள்ளது.


Next Story