சிதிலமடைந்த அரசு பள்ளிக்கூடத்தில் வட்டார கல்வி அதிகாரி ஆய்வு
கோலார், போவி நகர் பகுதியில் உள்ள சிதிலமடைந்த அரசு பள்ளிக்கூடத்தில் வட்டார கல்வி அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், பள்ளிக்கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கோலார்:
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
கோலார் (மாவட்டம்) டவுன் அருகே போவி நகர் பகுதியில் அரசு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடம் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கட்டிடத்தில் சில பகுதிகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. அது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வட்டார கல்வி அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன.
அந்த புகாரின் பேரில் போவி நகர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் வட்டார கல்வி அதிகாரி அசோக் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் வகுப்பறைகள், கழிவறைகள் போன்றவற்றை பார்வையிட்டார். மேலும், கட்டிடத்தின் சிதிலமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர், இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-
14 அம்சங்கள்
கோலார், போவி நகர் பகுதியில் உள்ள சிதிலமடைந்த அரசு பள்ளிக்கூடத்தில் வட்டார கல்வி அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், பள்ளிக்கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.போவி நகரில் செயல்பட்டு வரும் இந்த பள்ளிக்கூட கட்டிடம் சிதிலமடைந்து உள்ளது. மேலும், இந்த பள்ளி தனியார் கட்டிடத்தில் உள்ளது. பாதுகாப்பு கருதி மாணவர்களுக்கு மைதான பகுதியில் வைத்து பாடம் கற்பிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் முழுமையாக கல்வியை கற்க முடியாமல் சிரமம் அடைகிறார்கள். எனவே பள்ளிக்கூடத்தை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்ளும் வகையில் 14 அம்சங்கள் அடங்கிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை ஆசிரியர்கள் திறம்பட கையாண்டு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். பள்ளிக்கூடம் எங்கு இருக்கிறது என்பது முக்கியம் இல்லை. பாடம் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பது தான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.