கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் 92 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 16 கால் மண்டபம் மூழ்கியது


கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் 92 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு:  கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 16 கால் மண்டபம் மூழ்கியது
x

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து 92 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 16 கால் மண்டம் மூழ்கியது. கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மைசூரு:

கனமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி 10 நாட்களுக்கு மேலாக பெய்து ஓய்ந்தது. தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கேரளா வயநாடு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி, மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

92 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

அதன்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 123,80 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 74,068 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 67,849 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,283.17 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 23,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 92,849 கனஅடி தண்ணீர் திருமக்கூடலு சங்கமம் வழியாக அகண்ட காவிரியாக தமிழகம் செல்கிறது.

16 கால் மண்டம் மூழ்கியது

கபினி அணையில் இருந்து 23 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கபிலா ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடுகிறது. இதனால் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அருகே ஓடும் கபிலா ஆற்றில் உள்ள 16 கால் மண்டபம் தண்ணீரில் மூழ்கியது. கடந்த ஜூன் மாதம் பெய்த கனமழைக்கு கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்தபோதும் மண்டம் மூழ்கியது.

இந்த நிலையில் இந்தாண்டில் 2-வது முறையாக மண்டபம் மூழ்கியுள்ளது. மேலும் எந்தநேரமும் வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிட வாய்ப்பு உள்ளதால் கபிலா ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story