உப்பள்ளி-தார்வாரில் சுதந்திர தினவிழா கோலாகலம்
உப்பள்ளி-தார்வாரில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உப்பள்ளி:
தார்வார் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆர்.என்.செட்டி விளையாட்டு மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி ஹாலப்பா ஆச்சார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் மாவட்ட கலெக்டர் குருசித்த கவுடா, உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனர் லாபுராம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ் ஜகலாசர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல உப்பள்ளியில் உள்ள ஸ்ரீசித்தாரோட சாமி ரெயில் நிலையம் எதிரே உள்ள அரசு தமிழ் உயர் நிலைப்பள்ளியில் உப்பள்ளி தமிழ்ச் சங்கம் சார்பில் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட தமிழ்ச் சங்க செயலாளர் மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அங்கிருந்த தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர், தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திரசேகர், வினோத், முனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.