முதல்-மந்திரி பதவிக்கு நான் ஆசைப்படவில்லை- பா.ஜனதா மாநில துணை தலைவர் விஜயேந்திரா பேச்சு
நான் முதல்-மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டதில்லை என்று பா.ஜனதா மாநில துணை தலைவர் விஜயேந்திரா பேசினார்.
ஹாசன்:
எடியூரப்பா
ஹாசனில் தெற்கு பட்டதாரி தொகுதி வேட்பாளர் ரவிசங்கருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜனதா மாநில துணை தலைவர் விஜயேந்திரா, கட்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
ஊழல் இல்லாத கட்சி என்றால் அது பா.ஜனதாதான். மாநிலத்தில் சிறந்த தலைவர், ஆட்சியாளர், முதல்-மந்திரி என்றால் அது எடியூரப்பா தான். முதல்-மந்திரியாக அவர் பொறுப்பு வகித்திருந்தபோது ஏற்ற, தாழ்வு இல்லாமல் அனைத்து சமுதாய மக்களின் உயர்வுக்கும் பாடுபட்டார்.
மேலும் பா.ஜனதா கட்சியை கர்நாடகத்தில் உயர் இடத்திற்கு எடுத்து சென்ற பெருமை எடியூரப்பாவிற்கு உள்ளது. அவரது வழிகாட்டுதலில் பா.ஜனதா இன்றுவரை செயல்பட்டு கொண்டிருப்பது பெருமை அளிக்கிறது.
பா.ஜனதா சார்பில் நடைபெறும் சைக்கிள் பேரணி, பாதயாத்திரை யால் கட்சி மேலும் வலுபெற்று வருகிறது. இதே உத்வேகத்துடன் சட்டசபை தேர்தலை சந்தித்தால் எதிர்கட்சியே இல்லாத நிலை உருவாகி விடும். அந்த இலக்கை நோக்கி அனைவரும் பயணிக்கவேண்டும்.
முதல்-மந்திரி ஆசையில்லை
காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க மோடி அயராது உழைத்து வருகிறார். பிரதமர் மோடியில் 8 ஆண்டு ஆட்சி பல்வேறு நலதிட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை செய்துள்ளோம். இதுவரை பா.ஜனதா மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை பா.ஜனதாவின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. கர்நாடகத்தை பொறுத்தவரையில் பா.ஜனதா அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளது.
மேல்சபை தேர்தலில் தெற்கு பட்டதாரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து அடிமட்ட தொண்டர் வரை பிரசாரத்தில் ஈடபடவேண்டும். இதற்காக கட்சி பிரமுகர்கள் ஒற்றுமையுடன் உழைக்கவேண்டும். அரசியலில் அதிகளவு எனக்கு ஈடுபாடு இருந்தாலும், நான் இன்னும் சிறு குழந்தைதான். மந்திரி பதவிக்கோ, முதல்-மந்திரி பதவிக்கோ ஆசைப்படவில்லை. மேலிடம் எடுக்கும் முடிவை ஏற்பேன். கட்சிக்காக இறுதி வரை உழைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.