கர்நாடக அரசின் பாடநூல் குழுவை கலைக்க வேண்டும்: டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்
குவெம்புவை அவமதித்த விவகாரத்தில் கர்நாடக அரசின் பாடநூல் குழுவை கலைக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு:
நமது கலாசாரங்கள்
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு, பாடப்புத்தகங்கள் தொடர்பாக குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் பாடநூல் குழு தலைவர் ரோகித், சக்ரதீர்த்த எழுத்தாளர் குவெம்பு மற்றும் கன்னட கீதத்தை அவமதித்துள்ளார். குவெம்புவின் கொள்கை-கோட்பாடுகளை ஏற்று அவருக்கு அனைத்து விருதுகளையும் வழங்கி கவுரவித்துள்ளது. அவரது கன்னட கீதம் மூலம் அடுத்த தலைமுறைக்கு நமது கலாசாரங்களை கற்று தருகிறோம்.
அத்தகையவர் குறித்து பாடநூல் குழு தலைவர் கூறிய கருத்துகளை நான் கண்டிக்கிறேன். குவெம்பு மீது மரியாதை வைத்திருக்க வேண்டும். நமது மாநிலத்தின் கவிஞரை அவமதித்தவர் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. அவருக்கு இழைக்கப்பட்டுள்ள அவமானம் குறித்து எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் குரல் எழுப்ப வேண்டும்.
பாடத்திட்டங்கள்
குவெம்புக்கு அவமானம் இழைத்த விவகாரத்தில் பாடநூல் குழுவை உடனே கலைக்க வேண்டும். கடந்த ஆண்டு இருந்த பாடத்திட்டங்களை அப்படியே தொடர அனுமதிக்க வேண்டும். அந்த புத்தகங்களை படித்தவர்கள் பெரிய கல்வியாளர்களாக மாறியுள்ளனர். அதனால் பாடத்திட்டங்களை மாற்ற கூடாது. அதனால் பாடத்திட்டங்களை மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் சிந்தனை கூட்டம் வருகிற 2, 3-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். ராஜஸ்தானில் நடைபெற்ற சிந்தனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து இங்கு ஆலோசிக்கப்படுகிறது. கர்நாடக காங்கிரசின் நிதி குழு தலைவராக வீரப்பமொய்லி, சமூகநீதி குழு தலைவராக ரகுமான்கான், கட்சியின் அமைப்பு குழு தலைவராக பி.கே.ஹரிபிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சில கணக்குகள்
விவசாய குழு தலைவராக எம்.பி.பட்டீல், இளைஞர்கள், பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குழு தலைவராக கிருஷ்ண பைரேகவுடா, அரசியல் விவகார குழு தலைவராக பரமேஸ்வா் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 25 பேர் வரை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுக்கள் அவ்வப்போது கூடி ஆலோசித்து கட்சிக்கு ஆலோசனைகள் வழங்கும். நாங்கள் சில கணக்குகளை போட்டு மாநிலங்களவை தேர்தலில் 2-வது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம்.
3 கட்சிகளிலும் 4-வது இடத்திற்கு வாக்குகள் குறைவாக உள்ளன. நாங்கள் கடந்த முறை கவுரவமாக நடந்து கொண்டு வேட்பாளரை நிறுத்தவில்லை.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.