வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகை ரூ.5¾ கோடி மோசடி; வங்கி மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
30 வங்கிகளுக்கு மாற்றி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகை ரூ.5¾ கோடி மோசடி செய்த வங்கி மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு அனுமந்தநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் செலுத்திய நிரந்தர வைப்பு தொகை கணக்குகளை மண்டல மேலாளர் மூர்த்தி என்பவர் சரிபார்த்தார். அப்போது வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகையில் சில குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் விசாரணை நடத்தியபோது அந்த வங்கியின் மேலாளர், உதவி மேலாளர், ஊழியர் ஒருவர் சேர்ந்து வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகையான ரூ.5.70 கோடியை மேற்கு வங்காளம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள 30 வங்கிகளுக்கு சட்டவிரோதமாக மாற்றி முறைகேடு செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மூர்த்தி அளித்த புகாரின்பேரில் அனுமந்தநகர் போலீசார் வங்கியின் மேலாளர், உதவி மேலாளர், ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.