கர்நாடகத்தில் மின்சார தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது-மந்திரி சுனில்குமார் பேச்சு
கர்நாடகத்தில் மின்சார தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக மந்திரி சுனில்குமார் கூறினார்.
மங்களூரு:
சுதந்திர தின விழா
கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் நேற்று 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுதந்திர தின விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு வழக்கம்போல் சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதேபோல் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்திலும் சுதந்திர தின விழா கோலாகலமாக நடந்தது.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுனில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில கன்னடம் மற்றும் கலாசார துறை மந்திரியுமான சுனில் குமார் கலந்து கொண்டார்.
அணிவகுப்பு மரியாதை
அவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:-
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் நாம் நம் முன்னோர்களையும், சுதந்திர போராட்ட தலைவர்கள், வீரர்கள், தியாகிகள் ஆகியோரை நினைவில் கொள்ள வேண்டும். சுதந்திர பவள விழா ஆண்டை முன்னிட்டு கடந்த 4 மாதங்களாக வீடு, வீடாக கொடியேற்ற மக்களிடம் வலியுறுத்தி வந்தோம். அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.
5 லட்சம் வீடுகளில்...
தட்சிண கன்னடா மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. கர்நாடகத்தில் மின்சார தேவை நாளுக்குநாள் அதிகரித்து
வருகிறது. தற்போதைக்கு மின் உற்பத்தி தேவையான அளவில் இருந்தாலும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு நாம் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல வேண்டியது அவசியம்.
மங்களூரு அருகே அமைந்துள்ள கர்நாடக பாலிடெக்னிக் பகுதியில் புதிதாக மின் உற்பத்தி பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மங்களூருவில் 79 இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களுக்கு மடிக்கணினி
அதையடுத்து சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்று முதலிடம் பிடித்த தெரசா பள்ளி மாணவிகளுக்கு மந்திரி சுனில்குமார் பரிசுகள் வழங்கினார். மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 26 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி கவுரவித்தார். விழாவில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.