தசரா யானைகள் இன்று முகாம்களுக்கு திரும்புகின்றன


தசரா யானைகள் இன்று முகாம்களுக்கு திரும்புகின்றன
x

40 நாட்கள் மைசூருவில் தங்கியிருந்த தசரா யானைகள் இன்று (வியாழக்கிழமை) முகாம்களுக்கு திரும்புகின்றன. இதையொட்டி மந்திரி எச்.சி. மகாதேவப்பா தலைமையில் வழியனுப்பு விழா நடக்கிறது.

மைசூரு:-

மைசூரு தசரா விழா

மைசூரு தசரா விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் நிறைவடைந்தது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த தசரா விழாவை காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்தார்கள். கடைசி நாளில் ஜம்பு சவாரி ஊர்வலத்தை காண 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மைசூருவில் குவிந்தார்கள்.

இதனால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 14 யானைகள் கலந்து கொண்டன. இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தில் தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து சென்றது. பின்னால் மற்ற யானைகள் அணிவகுத்து வந்தன. இது பொதுமக்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

கொஞ்சி மகிழ்ந்த யானைகள்

இந்தநிலையில், ஜம்பு சவாரி ஊர்வலத்தை முடித்து கொண்ட யானைகள் அரண்மனை வளாகத்தில் ஓய்வு எடுத்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக நடைபயிற்சி, பாரம் சுமக்கும் பயிற்சி, வெடி சத்தப்பயிற்சி என பரபரப்பாகவே காணப்பட்ட தசரா யானைகள் நேற்று ஜாலியாக சகஜநிலைக்கு திரும்பின. யானைகள் பாகன்கள், பாகன்களின் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடின. மேலும் யானைகள் ஒன்றுடன் ஒன்று தும்பிக்கையை கோர்த்து கொஞ்சி மகிழந்தன. அத்துடன் ஊர்வலத்தில் பங்கேற்ற யானைகளுக்கு அணிவிக்கப்பட்ட அலங்கார பட்டைகள், மணி, போர்வைகள் உள்ளிட்டவற்றை பாகன்கள் பத்திரமாக எடுத்து வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று (வியாழக்கிழமை) தசரா விழாவில் பங்கேற்ற 14 யானைகள் அந்த முகாம்களுக்கு செல்கிறது.

பாகன்களுக்கு விருந்து

அவர்களுடன் பாகன்கள், அவர்களின் குடும்பத்தினரும் செல்கிறார்கள். இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா தலைமையில் யானைகள், பாகன்கள், அவரது குடும்பத்தினருக்கு அரண்மனை வளாகத்தில் சிற்றுண்டி விருந்து அளிக்கப்படுகிறது. மேலும் பாகன்களுக்கு கவுரவ தொகை, சீருடைகள் அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளி பாடப்புத்தங்கள், நோட்டு, பைகள், சீருடைகள் வழங்கப்படுகிறது.

தசரா விழாவில் கலந்து கொண்ட அபிமன்யு யானை உள்பட 14 யானைகளுக்கும் அரண்மனை வளாகத்தில் கரும்பு, கொப்பரை தேங்காய், வெல்லம், பழங்கள் உள்பட பல்வேறு வகையான உணவு கொடுத்து உபசரிக்கப்படுகிறது. பின்னர் 14 யானைகளும் அரண்மனை முன்பு அணிவகுத்து நிற்கும் பின்னர் அரண்மனை கோவில் பூசாரி யானைகளுக்கு பூஜை செய்கிறார். பின்னர் ஒவ்வொரு யானையாக லாரிகளில் ஏற்றப்பட்டு, முகாம்களுக்கு வழியனுப்பி வைக்கப்படுகிறது.

பாசப்போராட்டம்

40 நாட்களுக்கு ஒன்றுடன் ஒன்றாக முகாமிட்டு இருந்த யானைகள் பிரிந்து செல்லும் போது ஆண்டுதோறும் பாசப்போராட்டம் நடத்தும் நிகழ்வும் நடைபெறு வழக்கம். அதுபோல் இன்று தங்களது முகாம்களுக்கு திரும்பும் யானைகள், பாசப்போராட்டம் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்கிடையே 10 நாட்களாக நடந்த தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனையில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் நடந்த ஜம்புசவாரி ஊர்வலத்தை அமர்ந்து பார்க்க அரண்மனை வளாகத்தில் சுமார் 25 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. விழா முடிந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி முழுவதும் குப்பை கழிவுகள் பரவிக் கிடந்தன. அதனை நேற்று மைசூரு மாநகராட்சி ஊழியர்கள் துடைப்பத்தால் கூட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர் விடுமுறை காரணமாக மைசூரு அரண்மனை மற்றும் மலர்கண்காட்சி நடைபெறும் குப்பண்ணா பூங்கா பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. 10 நாட்கள் திருவிழாக்கோலம் பூண்டிருந்த மைசூரு நேற்று களையிழந்து காணப்பட்டது.


Next Story