கொப்பல் அஞ்சனாத்திரி மலையில்: பக்தர்கள் தங்கும் விடுதி, ஆஸ்பத்திரி பணிகளை 4 மாதங்களில் தொடங்க வேண்டும்


கொப்பல் அஞ்சனாத்திரி மலையில்:  பக்தர்கள் தங்கும் விடுதி, ஆஸ்பத்திரி பணிகளை 4 மாதங்களில் தொடங்க வேண்டும்
x

அஞ்சனாத்திரி மலையில் பக்தர்கள் தங்கும் விடுதி, ஆஸ்பத்திரி உள்ளிட்ட பணிகளை 4 மாதங்களில் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

கழிவறை வசதிகள்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கொப்பல் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அஞ்சனாத்திரி மலை மேம்பாட்டு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

அஞ்சனாத்திரி மலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்க 600 அறைகள் அடங்கிய தங்கும் விடுதி கட்டிடம் கட்டப்படுகிறது. ஆஸ்பத்திரி மற்றும் கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. அடுத்த 2 மாதங்களில் கட்டிட வரைபடங்களை தயாரிக்க வேண்டும்.

தூய்மைக்கு முக்கியத்துவம்

கட்டிடம் கட்டுவதற்கான விரிவான அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும். நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். வாகன நிறுத்தம் இடத்திற்கு 35 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. முதல் கட்டமாக 20 ஏக்கரில் பார்க்கிங் வசதி செய்து கொள்ள வேண்டும்.குடிநீர், மின் விளக்கு, பாதாள சாக்கடை, தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த அஞ்சனாத்திரி மலையில் தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. பல்வேறு புனித தலங்களில் தங்கும் விடுதிகள் சரியான முறையில் பராமரிக்கப்படுவது இல்லை.

பஸ் போக்குவரத்து

மேலும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த பணிகளை 8 மாதங்களில் முடிக்க வேண்டும். அஞ்சனாத்திரி மலைக்கு தேவையான பஸ் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். குறித்த காலத்திற்குள் திட்ட பணிகளை முடிக்க வேண்டும். 4 மாதங்களுக்குள் கட்டிட கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story