மிசோரத்தில் ஆட்சியை பிடிக்கும் சோரம் மக்கள் இயக்கம் - பெரும்பான்மையை தாண்டி முன்னிலை...!
மிசோரத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னனி பின்னடைவை சந்தித்துள்ளது.
அய்ஸ்வால்,
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டசபைக்கு கடந்த மாதம் 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 21 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி செய்கிறது. அம்மாநில முதல் மந்திரியாக ஜொராம்தங்கா செயல்பட்டு வருகிறார். அதேவேளை, சோரம் மக்களின் இயக்கம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை முக்கிய எதிர்க்கட்சிகளாக திகழ்கின்றன.
இந்நிலையில், மிசோரம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், எதிர்க்கட்சியான சோரம் மக்களின் இயக்கம் பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சோரம் மக்களின் இயக்கம் கட்சி 26 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேவேளை, ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சி 10 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேலும், பாஜக 3 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.
21 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி 26 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால் அக்கட்சி வெற்றிபெற்று மிசோரத்தில் ஆட்சியை கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.