ஒடிசா ரெயில் விபத்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - ஜெகன் மோகன் ரெட்டி
ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியினை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
அமராவதி,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின.
இதில் பலர் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து உயிர் இழந்தனர். இந்த நிலையில், இறந்தவர்கள் எண்ணிக்கை 288 அல்ல என்றும் 275 தான் என்றும் ஒடிசா அரசு தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா கூறியிருந்தார். மேலும் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெற்று வந்த 1,175 பேரில் 793 பேர் குணம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியினை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதன்படி ரெயில் விபத்தில் உயிரிழந்த குருமூர்த்தியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உதவித்தொகையுடன் கூடுதலாக இந்த இழப்பீடு வழங்க முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.