பெண்கள் குளிப்பதை படம் பிடித்த வாலிபர் கைது
வாலிபருக்கு அடைக்கலம் கொடுத்த போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவல்லா முத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரினு (வயது30). இவர் ஒரு குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகி வந்தார். அவர்களது வீட்டுக்கு பிரினு அடிக்கடி சென்று வருவார்.
அந்த வீட்டில் தாய் மற்றும் கல்லூரியில் படிக்கும் 2 மகள்கள் என 3 பேர் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இளைய மகள் குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது குளியலறை ஜன்னலில் இருந்து ஒரு பேனா கீழே விழுந்தது. பேனா எப்படி இங்கு வந்தது? என அவர் எடுத்து பார்த்தபோது அதில் ரகசிய கேமரா பொருத்தி இருந்தது தெரியவந்தது. அதில் இருந்த மெமரி கார்டை பரிசோதித்த போது அதில் இந்த மாணவி உள்பட வீட்டில் உள்ள 3 பெண்கள் பல நாட்களாக குளித்த மற்றும் உடை மாற்றும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து குடும்பத்தினர் திருவல்லா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பேனா கேமராவை வைத்தது பிரினு என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பிரினு தலை மறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் சங்கனாச்சேரி பகுதியிலுள்ள அவரது சகோதரி வீட்டில் பிரினு பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று பிரினுவை கைது செய்தனர்.
அந்த வாலிபர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வந்தபோது நைசாக குளியல் அறைக்கு சென்று பேனா கேமராவை வைத்துள்ளார்.
ரகசிய பேனா கேமரா மூலம் பிரினு பல முறை படம் பிடித்து அதனை ரசித்து வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பிரினுவுக்கு அடைக்கலம் கொடுத்த அவருடைய சகோதரியின் கணவரும் போலீஸ்காரருமான அருண் பாபு மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதொடப்பாக திருவல்லா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.