உங்களால் இரவும் பகலும் உழைக்கும் ஊக்கம் எனக்கு ஏற்படுகிறது: என்.சி.சி. மாணவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி
வளர்ச்சி அடைந்த இந்தியாவின் மிக பெரிய பயனாளர்களாக இளைஞர்கள் இருப்பார்கள் என என்.சி.சி. மாணவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாளைய தினம் கோலாகலமுடன் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அனைத்து விழா ஏற்பாடுகளும் தயாராகி உள்ளன.
குடியரசு தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள என்.சி.சி. மாணவர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார்.
இளைஞர்களுடனான உரையாடல் என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, 2 காரணங்களுக்காக இந்த உரையாடல் நிகழ்ச்சி எனக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
இளைஞர்களிடம் ஆற்றல், ஆர்வம், உற்சாகம் மற்றும் புதுமை ஆகியவை உள்ளன. உங்களின் வழியே நேர்மறையான பண்பு எனக்குள் இரவும் பகலும் வேலை செய்யும் வகையிலான ஊக்கம் ஏற்படுத்துகிறது என கூறினார்.
அவர் கூறிய 2-வது காரணத்தில், இந்த சுதந்திரத்தின் பேரமுத காலத்தில் நீங்கள் அனைவரும் நாட்டின் நோக்கங்கள் மற்றும் கனவுகளை பிரதிபலிக்கின்றீர்கள் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்போது, வளர்ச்சி அடைந்த இந்தியாவின் மிக பெரிய பயனாளர்களாக இன்றைய இளைஞர்களான நீங்கள் இருக்க போகிறீர்கள். இதனை கட்டமைக்கும் மிக பெரிய பொறுப்பாளர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள் என்று பேசியுள்ளார்.