'வழக்குகளை பதிவு செய்து என்னை மிரட்ட முடியாது' - ராகுல் காந்தி

தன் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் பயம் கொள்ளப்போவதில்லை என ராகுல் காந்தி தெரிவித்தார்.
திஸ்பூர்,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் மணிப்பூர் முதல் மும்பை வரை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் அசாம் தலைநகர் கவுகாத்தி செல்வதற்கு ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி முன்னேறினர். இதனை போலீசார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே யாத்திரையின்போது வன்முறையை தூண்டியதாக ராகுல்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் மீது அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அசாம் மாநிலம் பார்பேட்டா பகுதியில் ராகுல் காந்தியின் யாத்திரை இன்று நடைபெற்றது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"வழக்கு போட்டு என்னை மிரட்டலாம் என்ற எண்ணம் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. உங்களால் முடிந்த அளவு வழக்குகளை பதிவு செய்யுங்கள். மேலும் 25 வழக்குகள் பதியுங்கள். நான் பயப்பட மாட்டேன். பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் என்னை மிரட்ட முடியாது.
நரேந்திர மோடியின் நண்பர் கவுதம் அதானிக்கு எதிராக நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றி, எனது அரசு இல்லத்தை அபகரித்தனர். சாவியை நானே கொடுத்தேன். எனக்கு அது தேவையும் இல்லை.
எனது வீடு ஒவ்வொரு இந்திய குடிமகனின் இதயத்திலும் உள்ளது, நான் அங்கு வசிக்கிறேன். அசாம், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் எனக்கு லட்சக்கணக்கான வீடுகள் உள்ளன.
ஹிமந்த பிஸ்வா சர்மா தினமும் தனது இதயத்தில் வெறுப்புடன் எழுகிறார். அவர் உலகில் உள்ள அனைத்து மக்களையும் வெறுக்கிறார். 24 மணி நேரமும் வெறுப்பையும், பயத்தையும் கொண்டிருக்கிறார். நமது சண்டை அவருக்கு எதிரானது அல்ல, ஆனால் அவரது இதயத்தில் உள்ள வெறுப்புக்கு எதிரானது.
பயம் வெறுப்பின் பின்னால் மறைந்து கொள்கிறது. அவர்கள் வெறுப்பையும், பயத்தையும் பரப்புகிறார்கள், நாங்கள் அன்பைப் பரப்புகிறோம். பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். ஒரு மதத்தை இன்னொரு மதத்துடனும், ஒரு மொழியை இன்னொரு மொழியுடனும் சண்டை போட வைக்கிறது.
இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது லட்சக்கணக்கான மக்களிடம் பேசினோம். இந்தியாவில் வெறுப்பு வேலை செய்யாது, அன்பு இங்கே வேலை செய்கிறது என்று எல்லோரும் சொன்னார்கள். இது அன்பு நிறைந்த நாடு."
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.