புதிய சட்டங்களில் சிலவற்றை வரவேற்கிறோம் - ப.சிதம்பரம்


புதிய சட்டங்களில் சிலவற்றை வரவேற்கிறோம் - ப.சிதம்பரம்
x

புதிய சட்டங்கள் என்று சொல்லப்படுபவற்றில் 90% பழைய சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டவைதான் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை,

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட காலனியாதிக்க காலத்துச் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த புதிய சட்டங்களுக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் இந்த சட்டங்களுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகு அரசிதழில் கடந்த டிசம்பரில் வெளியானது.

இந்த நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதையொட்டி புதிய சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் சுமார் 5.65 லட்சம் போலீசார், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் மற்றும் சுமாா் 40 லட்சம் தன்னாா்வலா்களுக்கு பயிற்சியளித்து தயாா்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், புதிய சட்டங்களில் சிலவற்றை வரவேற்கிறோம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதிய குற்றவியல் சட்டங்களில் சிலவற்றை வரவேற்கிறோம். புதிய சட்டங்களில் சில முன்னேற்றங்கள் உள்ளன. அதனை திருத்தங்களாக அறிமுகப்படுத்தியிருக்கலாம்.

புதிய சட்டங்கள் என்று சொல்லப்படுபவற்றில் 90% பழைய சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டவைதான். பல பிற்போக்கு விதிகள் உள்ளன. சில மாற்றங்கள் அரசிலயமைப்பு சட்டத்திற்கு முரணானவை என பதிவிட்டுள்ளார்.


Next Story