ஒர்லி கார் விபத்து; புதிய குற்றவியல் சட்டமும், பாதிக்கப்பட்ட கணவரும் கூறுவது என்ன?


ஒர்லி கார் விபத்து; புதிய குற்றவியல் சட்டமும், பாதிக்கப்பட்ட கணவரும் கூறுவது என்ன?
x

மராட்டியத்தில் கார் விபத்தில் பெண் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய மிஹிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷா ரூ.15 ஆயிரம் செலுத்தியதும் கடந்த திங்கட்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

புனே,

மராட்டியத்தின் ஒர்லி நகரில் கொலிவாடா பகுதியில் வசித்து வரும் பிரதீப் நகவா (வயது 50), கடந்த ஞாயிற்று கிழமை காலை 5.30 மணியளவில் மனைவி காவேரி நகவாவுடன் (வயது 45) மீன் வாங்க ஸ்கூட்டரில் சென்றார். அப்போது, பின்னால் வந்த பி.எம்.டபிள்யூ. கார் இவர்களுடைய ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பிரதீப் தரையில் விழுந்த நிலையில், 2 கி.மீ. தொலைவு வரை காரில் இழுத்து செல்லப்பட்ட காவேரி பின்னர் உயிரிழந்து விட்டார். காரை குடிபோதையில் ஓட்டி சென்றது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் துணை தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷா என்பவரின் மகன் மிஹிர் ஷா (வயது 24) என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

விபத்துக்கு பின் மிஹிர் ஷா தப்பியோடி விட்டார். 72 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதன்பின் போலீசாரிடம், காரை ஓட்டிய விவரங்களை அவர் ஒப்பு கொண்டார் என்றும் ஆனால், மதுபானம் குடிக்கவில்லை என கூறியுள்ளார் என்றும் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஷிண்டே அலுவலகம் தெரிவித்து உள்ளது. ராஜேஷ் ஷாவை, ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கும்படி முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார்.

ராஜேஷ் ஷா, மிஹிர் ஷா கைது பற்றி விபத்தில் பலியான பெண்ணின் கணவரான பிரதீப் கூறும்போது, அவரும், அவருடைய குடும்பத்தினரும் தேடி வரும் நீதியானது, கிடைக்காத சூழலே உள்ளது என்றார். அவர் தொடர்ந்து, நாங்கள் ஏழைகள். எங்களுக்கு ஆதரவு தர யார் இருக்கின்றனர். இன்று அவர்கள் சிறைக்கு கொண்டு செல்லப்படுவர். நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீன் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

காரானது ராஜேஷ் ஷாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ராஜேஷ் ஷா, அவருடைய மகன் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த வழக்கில் மிஹிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷா ரூ.15 ஆயிரம் செலுத்தியதும் கடந்த திங்கட்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

மோடி அரசின் புதிய 3 குற்ற சட்டங்களில், விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்லும் வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட சட்டம் நிறைவேறிய நிலையில், அதன் பிரிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அதனால், இந்த பிரிவுகள் இவர்களுடைய வழக்கில் பதிவு செய்யப்படவில்லை.

இந்த சட்டத்தின்படி, குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். வழக்கில், சான்றுகளை அழிக்க ராஜேஷ் ஷா உதவியுள்ளார். இதுதவிர, காரின் நம்பர் பிளேட் எண்ணை உடைத்து இருக்கிறார்.

பெண் மீது கார் ஏறி விபத்து ஏற்படுத்தியதும், ஓட்டுநர் இருக்கையில் இருந்து மிஹிர் ஷாவை இடமாற்றம் செய்து உள்ளார். இதுபோன்ற பல விசயங்களில் ராஜேஷ் ஷா ஈடுபட்டு உள்ளார். இவை அனைத்தும் ராஜேஷ் ஷா உத்தரவின்பேரில் நடந்துள்ளன.

கார் ஓட்டுநர் ராஜரிஷி ராஜேந்திர சிங் பிதாவத் சிறையில் உள்ளார். கார் விபத்து ஏற்படுத்தி சென்றபோது, 2 கி.மீ. தொலைவுக்கு பின் காரில் சிக்கியிருந்த அந்த பெண்ணை எடுத்து சாலையின் ஓரத்தில் கிடத்தி விட்டு அவர்கள் தப்பினர். அப்போது, காரை பின்னால் எடுத்தபோது, அந்த பெண்ணின் மீது கார் மீண்டும் ஏறியுள்ளது என்றும் கூறப்படுகிறது.


Next Story