பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடு - உலக பால் தினத்தையொட்டி பால் வளத்துறை மந்திரி வாழ்த்து!


பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடு - உலக பால் தினத்தையொட்டி பால் வளத்துறை மந்திரி வாழ்த்து!
x

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி 'உலக பால் தினம்' அனுசரிக்கப்படுகிறது.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கும் மேலாக, பால் அனைவராலும் அருந்தப்பட்டு வருகிறது. அதிலும் பசு, எருமை, ஆடு மற்றும் கழுதைப்பால் அன்று முதல் இன்று வரை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் சத்துக்கள் மற்றும் பயன்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்க, உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி 'உலக பால் தினம்' அனுசரிக்கப்படுகிறது.

ஐநா சபையால் 'உலக உணவு' எனப் பால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. மனிதர்களுக்கான வரம் அது. டீ, காபி, தயிர், மோர், வெண்ணெய், நெய் என நம் வாழ்வின் முக்கிய அங்கமாக விளங்கும் அது, நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களுள் மிகவும் இன்றியமையாத ஒன்றும் கூட.

நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதில் இருக்கும் நன்மைகள் கணக்கிலடங்காதவை. உடலின் வலிமையை அதிகரிக்க உதவும் பல்வேறு ஊட்டச்சத்து கூறுகள் அதில் நிறைந்துள்ளன. தினமும் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக அருந்துவது உடல்நலனுக்கு உகந்தது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த நிலையில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"இந்திய கலாச்சாரத்தில், பால் அமிர்தத்துடன் ஒப்பிடப்படுகிறது. அது நமக்கு பெருமைக்குரிய விஷயம் ஆகும். பால் துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாகவும், அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளுள் ஒன்றாக விளங்குகிறது. இதற்கான பெருமை நமது பால் உற்பத்தியாளர்களையே சாரும்" என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தலைநகர் டெல்லியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட 75-வது தொழில்முனைவோர் மற்றும் 75 உள்நாட்டு கால்நடை இனங்களின் கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ருபாலா கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி தமிழகத்தை சேர்ந்த டாக்டர்.எல்.முருகன், மத்திய இணை மந்திரி டாக்டர்.சஞ்சீவ் குமார் பல்யான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


Next Story