உலக சுற்றுச்சூழல் தினம் - பூரி கடற்கரையில் மணற்சிற்பம்..!
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5-ந் தேதி) கடைபிடிக்கப்படுகிறது.
புவனேஸ்வர்,
1972-ஆண்டு சுவீடன் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றுச்சூழலும் என்ற வரலாற்று புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பயன்கள் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. முடிவில் ஜுன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5-ந் தேதி) கடைபிடிக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினக்கொண்டாட்டத்திற்கான கருப்பொருள் 'பிளாஸ்டிக் பயன்பாட்டை முறியடி' என்பது தான். நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அதிக பயன்படுத்துவது பிளாஸ்டிக் பொருட்கள் தான். அத்தகைய சுற்றுச்சூழலுக்கு கெடுதலாக விளங்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விதமாக இந்தாண்டு கருப்பொருள் அமைந்துள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஒடிசாவைச் சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிளாஸ்டிக் மாசு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பூரி கடற்கரையில் 2,320 பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி ஆமை வடிவ மணற்சிற்பம் வடிவமைத்துள்ளார். பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்பட்டுள்ள அந்த ஆமை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதில் "பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடி" பிளாஸ்டிக் இல்லாத இந்தியா என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த மணற்சிற்பம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.