இனி சீட் எண்ணிக்கை குறித்து பேசமாட்டேன் - கணிப்பு தவறியதை ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர்


Prashant Kishor
x

இனி தேர்தல் சீட் எண்ணிக்கை குறித்து நான் பேச போவதில்லை என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தலுக்கு பிறகு கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன அதில் பா.ஜ.க. மீண்டும் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என கூறப்பட்டது.

இதனிடையே பிரபல அரசியல் ஆலோசகரும், வியூகங்கள் வகுத்து கொடுப்பவருமான பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 292 இடங்களில் பெற்றி வெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெற முடியாமல் போனது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மற்றும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் கணிப்பு தவறாகியுள்ளது.

இதுகுறித்து குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிரசாந்த் கிஷோர் கூறியதாவது,

"நான் எனது மதிப்பீட்டை உங்கள் முன் வைத்தேன். என்னுடைய கணிப்பு எண்களின் அடிப்படையில் 20 சதவீதம் தவறாகிவிட்டது என்பதை கேமராவில் நான் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

பா.ஜ.க.வுக்கு 300-க்கு மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று நாங்கள் சொன்னோம். ஆனால் அவர்களுக்கு 240 தான் கிடைத்தது. ஆனால் பா.ஜ.க. மீது மக்களுக்கு சிறிது கோபம் இருப்பதாக நான் முன்பே கூறியிருந்தேன். எனினும் நரேந்திர மோடிக்கு எதிராக பரவலான அதிருப்தி அலை இல்லை.

இப்போது வெளிப்படையாக நாங்கள் கூறியது தவறு என்று நிரூபணம் ஆகியிருக்கிறது. ஆனால் எண்ணிக்கையை தாண்டி நாங்கள் கூறியது எதுவும் தவறு அல்ல. காரணம் அவர்கள் 36 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனர். வாக்கு சதவீதம் வெறும் 0.7 சதவீதமே குறைந்துள்ளது.

ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இதுவரை நான் அப்படி பேசியதில்லை. கடந்த 2 ஆண்டுகளில் தான், நான் எண்ணிக்கை அடிப்படையில் பேசி தவறு செய்துவிட்டேன். இனி எண்ணிக்கை குறித்து நான் பேசப் போவதில்லை.

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலின்போதும், இப்போது 2024 மக்களவை தேர்தலின்போதும் எண்ணிக்கையில் நான் தவறு செய்துவிட்டேன். எண்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், நான் சொன்னது அனைத்தும் சரியாக இருந்தது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story