வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் - மக்களவையில் கனிமொழி பேச்சு


வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் - மக்களவையில் கனிமொழி பேச்சு
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என்று மக்களவையில் கனிமொழி கூறினார்.

புதுடெல்லி,

மக்களவையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். நேற்று அம்மசோதாவை பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக அர்ஜுன்ராம் மேக்வால் முன்வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இது மிக முக்கியமான மசோதா. இதை ஒருமனதாக நிறைவேற்றி தாருங்கள். கருத்தொற்றுமை ஏற்பட்டால் நன்றாக இருக்கும்.

விவாதத்தின்போது என்ன யோசனை தெரிவிக்கப்பட்டாலும் அதை மத்திய அரசு பரிசீலிக்கும். நாடாளுமன்றம் முடிவு செய்தால், 15 ஆண்டுகளுக்கு அப்பாலும் இடஒதுக்கீட்டை நீட்டிக்கலாம் என்று அவர் பேசினார்.

கனிமொழி

பின்னர், மசோதா மீது நடந்த விவாதத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:-

'தொகுதி மறுவரையறைக்கு பிறகுதான் அமல்' என்ற நிபந்தனை தொடர்பான உட்பிரிவை மசோதாவில் இருந்து நீக்க வேண்டும். இந்த நிபந்தனை தேவையற்ற தாமதத்துக்கு வழிவகுக்கும்.

மகளிர் இடஒதுக்கீட்டுக்காக நாங்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? வருகிற நாடாளுமன்ற தேர்தலிலேயே இதை எளிதாக அமல்படுத்திவிட முடியும்.

ஜெயலலிதா வலிமையானவர்

இந்த மசோதா, இடஒதுக்கீடு பற்றியது அல்ல. பாரபட்சத்தையும், அநீதியையும் நீக்கும் செயல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெண்களை வணங்குவதாக மசோதாவின் பெயர் உள்ளது. எங்களை வணங்கவோ, வழிபடவோ வேண்டாம். சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் பெண்களின் விருப்பம்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை 'மிகவும் வலிமையான பெண்மணி' என்று ஏற்றுக்கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை என்று அவர் பேசினார்.

சிறப்பு கூட்டம் ஏன்?

மத்திய மந்திரி அனுப்ரியா படேல் பேசியதாவது:-

பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் ஒதுக்கப்படுகிறார்கள். எனவே, அவர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை தவறல்ல. பிற்படுத்தப்பட்ட பெண்களின் நலன்களை பாதுகாக்க பிரதமர் மோடி ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என்று அவர் பேசினார்.

தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரியா சுலே பேசுகையில், ''மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகுதான் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என்றால், சிறப்பு கூட்டத்தொடர் நடத்தியது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.

உள்ஒதுக்கீடு

சமாஜ்வாடி எம்.பி. டிம்பிள் யாதவ், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. ராஜீவ் ரஞ்சன் சிங், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில் மகளிர் மசோதாவை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார் என்று பேசினார்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.பி. அசாதுதின் ஒவைசி பேசுகையில், ''இந்த மசோதாவுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இது, உயர்சாதி பெண்களுக்கு மட்டுமே பலன் அளிக்கும். பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்காதது ஏன்?'' என்று கேட்டார்.


Next Story