தகவல்களை பரிமாற பெண்கள் மற்றும் சிறுவர்களை பயன்படுத்த ஐ.எஸ்.ஐ முயற்சி - ராணுவ அதிகாரி தகவல்
தகவல்களை பரிமாற பெண்கள் மற்றும் சிறுவர்களை பயன்படுத்த ஐ.எஸ்.ஐ முயற்சி செய்து வருவதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு பெண்கள் மற்றும் சிறுவர்களை தகவல்களை பரிமாற பயன்படுத்த முயற்சி செய்து வருவதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சினார் கார்ப்சின் ஜெனரல் அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் அமர்தீப் சிங் அவுஜ்லா கூறியதாவது:-
பயங்கரவாதிகள் பாரம்பரிய தகவல் தொடர்பு வழிமுறைகளைப் பயன்படுத்துவதில் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தகவல்கள், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை எடுத்துச் செல்ல பெண்களையும் சிறுவர்களையும் பயன்படுத்த சதி செய்து வருகின்றனர். இதுதான் தற்போதைய அச்சுறுத்தல்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத குழுக்களின் தொழில்நுட்ப நுண்ணறிவு செயல்பாடுகள் கணிசமாக குறைந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு வழித்தடமாக செயல்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை அகற்றும் வகையில் ராணுவம் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதத்தின் கண்ணுக்கு தெரியாத வடிவமானது கவலைக்குரியது. இதை களையெடுக்க நாங்கள் கூட்டாக செயல்பட்டு வருகிறோம்.
காஷ்மீரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் நாங்கள் நீண்ட தூரம் வந்துள்ளோம். அண்டை நாடு அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தை கைவிடவில்லை. பீர் பஞ்சலின் இருபுறமும் மீண்டும் மீண்டும் பிரச்சனைகளை உருவாக்குகிறது. வடக்கு காஷ்மீரின் மச்சில் செக்டாரில் சமீபத்திய ஊடுருவல் முயற்சியானது அதற்கு ஒரு சான்றாகும்.
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவல் முயற்சிகள் ஓரளவு குறைந்திருக்கின்றன. ஆனால் பிர் பஞ்சால் மற்றும் பஞ்சாபின் தெற்கில் சில முயற்சிகள் நடந்துள்ளன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் சரியான எண்ணிக்கையைக் குறிப்பிடுவது கடினம். ஆனால் எனது மதிப்பீட்டின்படி, கடந்த 33 ஆண்டுகளில் இது நிச்சயமாக மிகக் குறைவு.
இவ்வாறு அவர் கூறினார்.