கத்தியால் குத்தி பெண் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
கத்தியால் குத்தி பெண்ணை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிவமொக்கா-
கத்தியால் குத்தி பெண்ணை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
நிலத்தகராறு
சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா கப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனில் (வயது24). இவர் சிகாரிப்புரா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அனிலுக்கு சொந்தமான நிலம் கப்பனஹள்ளி பகுதியில் உள்ளது. அந்த இடத்திற்கு அருகே அதேப்பகுதியை சேர்ந்த நீலம்மா (35) என்பவருக்கும் இடம் உள்ளது.
இந்தநிலையில் நிலம் தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந் தேதி அனில் தனது நிலத்திற்கு வந்தார். அப்போது நீலம்மாவும் அங்கு வந்தார்.
இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் இரவு நீலம்மா அந்த வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அனில் நீலம்மாவை மறித்து கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பி சென்றார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே நீலம்மா பரிதாபமாக இறந்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து சிகாரிப்புரா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீலம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிகாரிப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிந்து அனிலை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. சிகாரிப்புரா புறநகர் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில், நீலம்மாவை கொலை செய்த அனிலுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனவும் கூறி நீதிபதி தீர்ப்பளித்தார்.