மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து செய்ததால் ரெயில்வே வருமானம் இத்தனை கோடியா..?


மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து செய்ததால் ரெயில்வே வருமானம் இத்தனை கோடியா..?
x

ரெயில்வே விதிமுறைகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்.

புதுடெல்லி:

இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரெயில்வே அமைச்சகம் நீக்கியது. இந்த சலுகை திரும்பப் பெறப்பட்டதிலிருந்து, மூத்த குடிமக்கள் ரெயில் பயணங்களுக்கு மற்ற பயணிகளுக்கு இணையாக முழு கட்டணத்தையும் செலுத்தி பயணிக்கின்றனர்.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியன் ரெயில்வே பதில் அளித்துள்ளது. அதில், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம், மார்ச் 20, 2020 முதல் ஜனவரி 31, 2024 வரை ரெயில்வே துறைக்கு 5,875 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே விதிமுறைகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள். கொரோனா பொது முடக்கத்திற்கு முன்பு, ரெயில் கட்டணத்தில் மூத்த குடிமக்களில் பெண்களுக்கு 50 சதவீத சலுகையும், ஆண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 40 சதவீத சலுகையும் ரெயில்வே வழங்கியது.

சலுகை ரத்து செய்யப்பட்டபின் கடந்த நான்கு ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் பிரிவில் சுமார் 13 கோடி ஆண்களும், ஒன்பது கோடி பெண்களும் மற்றும் 33,700 திருநங்கைகள் மொத்தமாக 13,287 கோடி பணம் செலுத்தி ரெயில் டிக்கெட் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது.

இருப்பினும், ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் இதற்கு நேரடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை இந்திய ரெயில்வே வழங்கி வருவதாக கூறுகிறார்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய வைஷ்ணவ், ஒரு இடத்திற்கு செல்ல ரெயில் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் கட்டணம் என்றால், ரெயில்வே 45 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிப்பதாகவும், 55 ரூபாய் சலுகை அளிப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story